தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3, 4-ஆம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதே போன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் மத்திய அரசால் உரிய நிவராண தொகை வழங்கப்படவில்லை.
இதனையடுத்து வெள்ள நிவாரண நிதி வழங்காதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரியும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியும் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி. ஆர். பாலு எம்.பி. தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளுக்கு திமுக சார்பில் கட்டங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆரவன் சார்பில் தலா 100 கிராம் அளவில் 2000 பாக்கெட் அல்வா வழங்கப்பட்டது. பயணிகளுக்கு வழங்கப்பட்ட அல்வா பாக்கெட்களில், ‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி ஜீரோ (ZERO) என குறிப்பிடப்பட்டிருந்தது.