சிவகங்கை மாவட்டம் கோமாளிப் பட்டியில், உள்ளூர் படையைப் பற்றிய குறிப்புகளுடன் கூடிய இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகளை, சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் அவர்களின் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தகரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன் மற்றும் காளையார் கோவில் சரவண மணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
கல்வெட்டுகளின் செய்தி குறித்து அவர்கள் கூறியதாவது, ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் பயின்று வரும் கல்வெட்டுகள் தமிழகத்தில் மொத்தம் எழுபதிற்கும் மிகாமலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளவை.
ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனிப்பலகைக் கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்ட கல்வெட்டுகளாகவே உள்ளன. சோழர், பாண்டியர்களின் ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி அவர்களுள் ஒருவருக்கு அதிகாரத்தை அளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளனர்.
ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் ஊர்களுக்கு பாதுகாப்பு தந்துள்ளனர் என்பது கிடைக்கின்ற கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. சோழர், பாண்டியர்களின் வலுவான ஆட்சிகளுக்குப் பிறகு மதுரை சுல்தான்கள் போன்றவர்களின் நிலையற்ற ஆட்சி நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு தரவில்லை. அங்கங்கு மக்களின் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்பட்டு அச்சத்திற்கு உள்ளானது. அதேபோல் வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே இந்த வகையான பாடிகாவல் முறை பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பாதுகாப்பு தருபவர்களுக்கு, பாதுகாப்பு கோருபவர்கள் சில உரிமைகள் அல்லது வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குலசேகர பாண்டியனின் தகவல்களுடனும் கிடைத்துள்ளன. அவற்றுள் வில் அம்பு சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊர் நிலைப்படை தங்குமிடமாக இருந்துள்ளது. அங்கிருந்து இங்கு வந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு இவ்வீரர்கள் பாதுகாப்பு தந்துள்ளனர். இளமையார் வீரர் - அணுக்கவில்லாற் தலைவனுக்கு நெருங்கிய விற்படையினர் ஆவர். இந்த கல்வெட்டின் மேல் பகுதியில் வில்லும் அம்பும் உள்ளது.
இரண்டாவது கல்வெட்டில் குலசேகரப் பாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டில் சித்திரை மாதம் கனவழி நாட்டுப் படையும், படை கரணிவற்கு ஆசிரியம் கொடுத்த செய்தி இடம்பெற்றுள்ளது. இதில் வழமையை குறிக்க பூரண கும்ப சின்னம் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை அறிய உதவி செய்த கல்வெட்டு அறிஞர் முனைவர் ராஜகோபால், முனைவர் மணிகண்டன், மணிகண்டபோஸ், பொன் கார்த்திகேயன், அன்பு ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினர்.