கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, “ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றங்கரையில் மேற்புற கள ஆய்வின் போது சுடுமண் பொம்மை, வட்டசில்லு, சுடுமண் புகைபிடிப்பான், சுடுமண் அகல் விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆற்றுப் படுகையில் ஆய்வு மேற்கொண்டபோது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணிகள் கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தையும் கொண்டதாக உள்ளது. தோடு போன்ற அமைப்பினைக் கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டுருவம் போன்று வரையப்பட்டுள்ளது. இந்த கோட்டுருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களைக் காட்டுவதாக உள்ளது. சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேதமடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதுபோன்ற சுடுமண்ணாலான காதணிகள் கீழடியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்கள்.