Skip to main content

'ஏமாற்றமும், குழப்பமும் தான் கடைசியாக மிஞ்சுகிறது'- துரை வைகோ பேச்சு

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
'Disappointment and confusion are the last to survive' - Durai Vaiko speech

'இந்திய தண்டனை சட்டங்களை மாற்றி சமஸ்கிருத பெயர்களில் புதிய சட்டங்கள் இயற்றி இருக்கிறார்கள். இதில் பார்த்தால் கடைசியாக  ஏமாற்றமும், குழப்பமும் தான் மிஞ்சுகிறது' என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (JAAC) சார்பில் ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து 29.07.2024 இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க, JAAC அமைப்பின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த  போராட்டத்தில்  திமுக சார்பில் ஆ.ராசா எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ராஜா, மதிமுக சார்பில்  திருச்சி எம்.பி துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட எம்.பி. துரை வைகோ பேசுகையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (JAAC - The Joint Advocates Association Action Committee) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் JAAC அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.

முதலில் உங்களுடைய போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திமுகவின் சார்பிலும், தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் எங்கள் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு வருகை உள்ளீர்கள். குறிப்பாக, திருச்சியில் இருந்தும் நிறைய வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் பல்வேறு போராட்டங்களை JAAC அமைப்பு ஒருங்கிணைத்தது. அப்படி.. திருச்சியில் JAAC அமைப்பு நடத்தியப் பேரணியில் பங்கேற்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது ஆதரவை தெரிவித்தேன் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் இந்த மூன்று கொடிய சட்டங்களுக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன் என்பதையும் உறுதியாக இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பில் உறுதி கூறப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சம நீதிக்கு ஏதிராக, இந்தப் புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

 

'Disappointment and confusion are the last to survive' - Durai Vaiko speech

இந்தச் சட்டங்களில் என்ன மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார்கள்? இந்தச் சட்டங்களால் என்ன நடக்கும் என்பதை சுருக்கமாக இங்கே கூற விரும்புகிறேன்.இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய சாட்சியச் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றிற்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 என்று கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் பெயர் வைத்து இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், இந்திய அரசியலமைப்பின் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது மட்டுமல்ல; நாடு விடுதலை அடைந்ததற்குப் பிறகு, தேசிய சட்ட ஆணையத்தை கலந்து ஆலோசிக்காமல் இந்திய நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டதும் இதுவே முதன்முறை ஆகும்.

அதுமட்டுமா? எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் இல்லாதபோது, ஆளுங்கட்சியாக உள்ள ஒன்றிய பாஜக அரசு தங்களது எண்ணிக்கை பலத்தால் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. பாஜக ஆட்சியில் 'நாடாளுமன்ற ஜனநாயகம்' என்பது எங்கே இருக்கிறது என்ற கேள்வியை இந்தப் போராட்டத்தின் வாயிலாக முன்வைக்க விரும்புகிறேன்.

அப்படி என்னதான் பழைய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் இயற்றி இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமும், குழப்பமும் தான் கடைசியாக மிஞ்சுகிறது. முதலில், இந்தியில் பெயர்களை மாற்றி இருக்கிறார்கள். இந்தச் சட்டங்களின் பெயர்களை கற்றறிந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட வல்லுநர்களுமே உச்சரிப்பதற்கு சிரமப்படும்போது சாமானியர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பது தான் அடிப்படைக் கேள்வி. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி சமீபத்தில் சொன்னார்: 'நான் இந்த மூன்று சட்டங்களின் புதிய பெயர்களுக்கு பதிலாக பழைய பெயர்களையே பயன்படுத்துவேன்' என்று. ஒரு நீதிபதியே இப்படி சொல்கிறார் என்றால் மற்றவர்களால் எப்படி இந்தச் சட்டங்களின் பெயர்களை புரிந்து கொள்ள முடியும்? என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களிலும் பழைய சட்டங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துக்களே 95 சதவிகிதம் மீண்டும் அப்படியே இடம்பெற்று உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த காலனிய ஆட்சிகால சட்டங்களை மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அப்படியே அந்தச் சட்டங்களை காப்பி அடித்திருக்கிறார்கள். பழைய சட்டங்களில் உள்ள சில பிரிவுகளை நீக்கி இருக்கிறார்கள். சட்டப் பிரிவுகளின் எண்களையும் (Numbers) மாற்றி இருக்கிறார்கள். இதனால் என்ன நிகழும் என்றால்.. நீதிமன்றத்திலும் குழப்பம் ஏற்படும். எந்த சட்டப் பிரிவை பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சட்ட மாணவர்களிடையே குழப்பமும், விவாதமும் ஏற்படும்.

அதுமட்டுமல்ல இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஜூலை 1 -க்குப் பிறகு பதிவாகும் வழக்குகளுக்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்துமா? அல்லது, ஜூன் 30 -க்கு முன்னர் பதிவான வழக்குகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்துமா? தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு எந்தச் சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்படும்? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் தெளிவாக பதில் கிடைக்கவில்லை.

mdmk

சில புதிய மாற்றங்களை இந்தச் சட்டங்களில் ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஏன் ஒட்டுமொத்த சட்டத்தையுமே மாற்ற வேண்டும் என்றக் கேள்வி எழுகின்றது. சில மாற்றங்களை செய்வதற்கு சட்டத் திருத்தம் செய்வதே போதுமானது ஆகும். அப்படி இருக்கையில், இந்தப் புதிய சட்டங்களால் யாருக்கு நன்மை என்று பார்த்தால்.. உறுதியாக பொதுமக்களுக்கோ, நீதித்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எதுவுமில்லை. காவல்துறைக்கு தான் இந்தச் சட்டங்களின் வாயிலாக கூடுதல் அதிகாரங்களை, வானளாவிய அதிகாரங்களை வழங்கியிருக்கிறார்கள். உதாரணமாக, பழைய சட்டத்தின்படி,ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவரை 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க முடியாது. ஆனால் இந்தப் புதியச் சட்டம், ஒருவரை 60 நாளில் இருந்து 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம் எனக் கூறுகிறது. இதனால், விசாரணை என்றப் பெயரில் காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் 90 நாட்கள் வரை துன்புறுத்தலாம். சித்திரவதை செய்யலாம். இந்த 90 நாட்களுக்கு ஜாமீன் வாங்க முடியாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் காவல் மரணத்தை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிகழ்வுகளை இனி நாடு முழுவதும் நாம் பார்க்க வேண்டியது இருக்கும். தற்போதைய சூழலில், சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள் மட்டுமே மொத்த எண்ணிக்கையில் 66 சதவிகிதம் ஆகும். இனி இந்த எண்ணிக்கை 90 சதவிகிதமாக உயரும். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிப்பவர்களை விட, விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையே உயர்வாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், காவல்துறை உயர் அதிகாரியே ஒருவரை 'பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ்' கைது செய்யலாம். அவருக்கு அந்த உரிமையை இந்தப் புதிய சட்டம் வழங்குகிறது. இந்த புதிய சட்டத்தில் தேசத்துரோக (Sedition) வழக்கு என்பது நீக்கப்பட்டிருந்தாலும், அதற்கு மாற்றாக `இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது' என்ற வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் வார்த்தைகள் தெளிவற்று இருப்பதால் கருத்து சுதந்திரத்திற்கு எந்த வகையில் வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம். யாரை வேண்டுமானாலும் 'தேச துரோகி' ஆக்கிவிடலாம். நண்பர்கள் நாலு பேருக்குள் உரையாடினாலே நாட்டு எதிரான கருத்தை தெரிவித்தார்கள் என கைது செய்யப்படலாம்.

முன்பிருந்த தேசத்துரோக சட்டத்துக்குகூட அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்றிருந்தது. இந்த புதிய சட்டத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு, பயங்கரவாத சட்டப்பிரிவான UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த புதிய சட்டத்தின்கீழ், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டாலே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். சாதாரண போராட்டங்களில் ஈடுபடுபவர்களைக்கூட அரசுக்கு எதிராக செயல்பட்டவர் என முத்திரை குத்தி அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து இங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற நம் அனைவரையும் கூட பயங்கரவாதிகள் என கூறி தற்போது கைது செய்யலாம். ஆகவே, சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும், சாமானியர்களின் உரிமைக் குரலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக உள்ள இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்