தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் புதியதாக சேரும் மாணவர்களும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களும் 'இப்போகிரேடிக் உறுதிமொழி' எடுக்கும் பழக்கம் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தக் கல்லூரியின் டீன் டாக்டர் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் விசாரணையும் நடத்திவருகிறது.
இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, "தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய சுற்றறிக்கையால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியது சுற்றறிக்கைதான்; உத்தரவு அல்ல. அந்த சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் ஆணையத்தின் சுற்றறிக்கையை தவறுதலாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி வாசித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறிய நாராயண பாபு, காலங்காலமாக பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழியையே தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.