நாடு முழுவதும் கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாத இறுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்ட நிலையில், 7-ம் தேதி முதல் கல்லூரிகளில் முதுகலை இரண்டாம் ஆண்டு மற்றும் இளங்கலை இறுதி ஆண்டுகள் மட்டும் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதில் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளும் திறக்கப்பட்டன. நாகர்கோவில், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். 8 மாதங்களுக்குப் பிறகு சக மாணவிகளைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பொங்க அன்பைப் பரிமாறினார்கள். மாணவிகள் கல்லூரிக்குள் வருவதற்கு முன், வாசலில் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், மாணவிகள் எல்லாரும் மாஸ்க் அணிந்துகொண்டு வந்தனர்.
வகுப்பறையில் ஒரு டெஸ்கில் இரண்டு மாணவிகளை மட்டும் உட்கார வைத்து சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும், இடைவேளையின்போதும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து உட்கார்ந்தனர். அதேபோல் பேராசிரியர்களும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வகுப்புகளை நடத்தினார்கள். மேலும் மாணவிகளின் வருகையும் மிகக் குறைவாகவேதான் இருந்தன. தொடர்ந்து வகுப்புகள் இருந்தால் இனி வரும் நாட்களில் மாணவிகள் வருகை அதிகரிக்கும் என்றது கல்லூரி நிர்வாகம்.
இதே போல் மற்ற கல்லூரிகளிலும் மாணவ மாணவிகள் குறைவாகவேதான் வருகை தந்தனர்.