ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை அதிலும் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி தாலுகாவில் தான் அதிகம்.
சிறுவன் சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து மீட்க போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே நக்கீரன் இணையம் தனி வாட்ஸ் அப் எண் உருவாக்கி பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணறுகள் பற்றிய தகவல் அனுப்பினால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் என்று சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தோம்.
நக்கீரன் உருவாக்கிய வாட்ஸ் அப் எண்ணிற்கு தினந்தோறும் பல படங்கள் வருகிறது. உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டும் வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாத்தூர் ராமசாமிபுரத்தில் ஒரு் ஆழ்குழாய் கிணறு ஆபத்தான நிலையில் தரை மட்டத்தில் திறந்து கிடந்த படம் வந்தது. அந்த படத்தை உடனே அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி நடவடிக்கை கோரினோம்.
அடுத்த சில மணி நேரத்தில் அந்த ஆழ்குழாய் கிணறுமூடப்பட்ட படத்தையும் நமக்கு அனுப்பினார். அதேபோல அறந்தாங்கி களப்பக்காட்டில் ஒரு ஆழ்குழாய் கிணறு ஆபத்தான நிலையில் இருப்பதை வீடியோவாக நமக்கு அனுப்பி இருந்தனர். அந்த வீடியோவும் வட்டாட்சியருக்கு அனுப்பிய சில மணி நேரத்தில் மூடப்பட்டது.
தொடர்ந்து நக்கீரன் மூலமாக சுட்டிக்காட்டப்படும் ஆழ்குழாய் கிணறுகளை தற்காலிகமாக மூடி நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரிகள் அந்த குழிகளை மழைநீர் சேமிக்கவோ அல்லது மழைநீரை சேமிக்க முடியாத குழிகளை நிரந்தரமாகவோ மூடினால் சிறப்பாக இருக்கும். வரும் காலங்களில் உயிர்பலிகளை தடுக்கலாம்.