ஜாக்டோ ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில் வேலை நிறுத்தமாக தொடங்கிய போராட்டம் சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்தது. இந்த நிலையிலும் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதைவிட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை கைது செய்துள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் குளமங்கலம் வடக்கு கிராம முன்னால் மாணவர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கினார்கள். அதே போல அந்தந்த கிராம இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை லேனா மண்டபத்தில் அடைத்து வைத்து வீடியோ எடுக்க முயன்றதால் போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் சிலர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மண்டபத்திலிருந்து வெளியே செல்ல மறுத்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க தனது நண்பர் எம்.எஸ்.ரவியுடன் வந்த ஆசிரியர் பன்னீர் செல்வமும் கைது செய்யப்பட்டு அதிகாலை சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல மண்டபத்தில் இருந்த நண்பர்களை காண வந்த குருமூர்த்தி, ராஜா என 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா 14 ஆசிரியர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதனால் திங்கள் கிழமை போராட்டம் மேலும் தீவிரமடையும் என்கின்றனர்.