ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ''கொங்கு பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை, பணிவாய்ப்பு ஆராய்ச்சி, வெளியீடுகள் ஆகியவற்றில் நிர்வாகம், பேராசிரியர்கள், ஊழியர்களின் சிறப்பான பணியின் காரணமாக, என்.ஏ.ஏ.சியின் ஏ பிளஸ் தரச்சான்றினைப் பெற்றுள்ளது.
கரோனா தொற்றுக்கு பிறகு, கற்றல், கற்பித்தல் மற்றும் பணிபுரியும் முறையும் மாற்றம் பெற்றுள்ளது. நீதித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களின் நேரடியான பங்கேற்புடன் கூடிய வாதங்கள் இல்லாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உற்பத்தித்துறை போன்ற துறைகளில் மட்டும் தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருந்தது. தற்போது நமது வாழ்வின் எல்லா பகுதிகளும் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. கலை அறிவியல், பொறியியல், சட்டம் என எந்த கல்வி பயின்றாலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும்போதே, தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நீங்கள் கிராமப்புறம், நகர்ப்புறம் என எங்கிருந்து வந்திருந்தாலும், கல்லூரியில் படிக்கும்போதும், மாணவர்களுடன் பழகும் போது, மதம், பணம், சமூக ஏற்றத்தாழ்வு இவற்றையெல்லாம் விட மனிதாபிமானமே முக்கியம் என அறிந்திருப்பீர்கள். 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப மாணவர்கள் வாழ வேண்டும்.
கல்லூரி படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமானது அல்ல. ஒழுக்கமும், ஒற்றுமையும் கூடிய நடத்தையை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடமாகும். வாழ்வின் வெற்றிக்கும், இலக்கை அடையவும் நல்ல நடத்தை என்பது முக்கியமானது.
வகுப்பறையில் கற்பது மட்டுமல்ல அறிவு. சுயமாகவும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக் கொள்வதே அறிவாகும் என்பதை உணர்ந்து அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். உங்கள் தொழிலில் வெற்றி பெற, வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கடினமாக உழைக்கவில்லை என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அர்த்தமாகும். எனவே, வெற்றி பெற கடின உழைப்பும் முக்கியமானதாகும். உங்கள் தொழிலை புதுமையானதாக அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளே, சிறகுகளாய் மாறி எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."என்றார்.
விழாவில், இளநிலை மாணவர்கள் 1415, முதுநிலை நிலை மாணவர்கள் 309 பேர் என மொத்தம் 1724 பேர் பட்டம் பெற்றனர்.