திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்பட்டி கருப்பு பகுதி மற்றும் முளையூர் பகுதிகளில் தமிழக அரசின் மினி கிளினிக் துவக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர்கள் இதனை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மருத்துவ அதிகாரிகள், கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முளையூர் பகுதியில் மினி கிளினிக்கை துவங்கி வைத்துவிட்டு கர்ப்பமடைந்த பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், “எந்தத் திட்டங்களை செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார். 2,500 ரூபாயை ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கிறார்கள், வேஷ்டி சேலைகள் கொடுக்கிறார்கள் அதற்கு ஒரு ரூ.500 சேர்த்தால் மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் ஆகிறது.
முதலமைச்சர் அறிவித்திருக்கிறார், அமைச்சர் கொடுக்கிறார் இது ஏமாற்று வேலையா. ‘மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்’ தி.மு.க. ஆட்சியில் அவங்க அப்பா, அவங்கெல்லாம் செஞ்சிருந்தா புத்தர்கள் வாரிசு, இயேசுநாதர் வாரிசு, நாம செஞ்சிருந்தா இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுகள் மாதிரி எது செஞ்சாலும் தப்பு” என்று பேசினார்.
விழா மேடையில் அமைச்சர் சீனிவாசன் பேசும்போது வாய்த்தவறி இயேசுநாதரை சுட்டது கோட்சே என்று பேசியது சமூக வலைதளங்களில் பெரும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.