திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் டி.சுரேஷ் பட்டதாரி ஆசிரியரான இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மீது அதிக பற்று கொண்ட ரமேஷ், அவரின் 88- வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று 15.10.2019 செவ்வாய்கிழமை மாலை 04.00 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகிர்தா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை பியூலா முன்னிலை வகித்தார். 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் டி.சுரேஷ், வேம்பு, புங்கை, மகாகனி, படாக், மாதுளை, புளி, சீதாப்பழ மரக்கன்றுகளை வழங்கினார். மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கி சென்றனர். மரக்கன்றுகள் வழங்கியது குறித்து பள்ளி ஆசிரியர் டி.சுரேஷ் கூறுகையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மண் வளம் காத்து மரக்கன்றுகளை அதிகளவில் வளர்க்க வேண்டும் என கூறி வந்தார்.
மேலும் அவருடைய சொல்லை கேட்டு பலர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தமிழக அரசும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் நட்டு வருகிறது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு காற்று மாசு அடைவதை தடுக்க முடியும் என்றார். தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ஆசிரியர் சுரேஷை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.