திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியைச் சேர்ந்த கலைவாணி என்ற 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர், போலீசாரால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொல்லப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று 9ஆம் தேதி தமிழகம் முழுக்க உள்ள சலூன் கடைகள் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் அடைக்கப்பட்டன.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,800-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும் குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் வெங்கடேசன், தமிழர் கழக கட்சி மாவட்டச் செயலாளர் குணசேகரன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இறந்த சிறுமியின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் சிலர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தனர்.