திண்டுக்கல் மாநகரில் உள்ள மலைக்கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இந்த முத்தழகு பட்டியில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ மக்களே வசித்து வருகிறார்கள். இங்குள்ள புனித செபஸ்தியார் திருத்தலத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் கடைசியில் மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 4- ஆம் தேதி புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இரண்டாம் நாள் புனித செபஸ்தியார் மின் அலங்காரத்தில் ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அதை தொடர்ந்து மூன்றாம் நாள் செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் அரிசி, காய்கறிகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கினார்கள். இதில் திண்டுக்கல் மாநகரில் கூலி வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எல்லாம் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பதால், அவர்கள் வருடந்தோறும் தங்கள் சங்கங்கள் மூலமாக ஆடுகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக ஒரு சங்கத்துக்கு மூன்று, நான்கு ஆடுகள் என நூற்றுக்கணக்கான ஆடுகளை புனித செபஸ்தியாருக்கு காணிக்கை செலுத்த மேல தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று, முத்தழகு பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தினார்கள். அதேபோல் புனித செபஸ்தியாருக்கு வேண்டுதல் காணிக்கையாக ஆடுகள், கோழிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்தனர்.
இப்படி புனித செபஸ்தியாருக்கு ஆயிரம் ஆடுகள், 1700 கோழிகள் காணிக்கையாக பக்தர்கள் கொண்டு வந்தன. ஆடுகள், கோழிகளை ஊரில் உள்ள மக்களும், கோவில் நிர்வாகிகளும் இணைந்து, பக்தர்கள் வழங்கிய ஆடு கோழிகளை கொண்டு அசைவ விருந்து தயார் செய்யும் பணியில் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கறி விருந்தை தயார் செய்தன. அதன் பிறகு சமைத்த சாப்பாட்டை மலைபோல் குவித்தனர்.
பின்பு தயாரான ஆடு கோழி கறிகளையும் அண்டா அண்டாவாக வைத்தனர். கறி விருந்தை சாப்பிட பொதுமக்கள் பெரும் திரளாக சாதி மதம் பார்க்காமல், அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று விடிய விடிய சாப்பிட்டு வருகிறார்கள். அதோடு புனித செபஸ்தியாருக்கு ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் டோக்கன் வழங்கும். அதை வைத்து பக்தர்களும், பொதுமக்களும் பாத்திரங்களை கொண்டு வந்து அன்னதானத்தை வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர். புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூலம் திண்டுக்கல் மாநகரம் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.