சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு சிறை ஊழியருக்கு, 5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில் 850 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கென சிறைச்சாலைக்குள் கேண்டீன் இயங்கி வருகிறது. சிறைத்துறை வழங்கும் உணவு தவிர, கைதிகள் தங்களுக்குப்பிடித்த தின்பண்டங்களை சொந்த செலவில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், அவர்களின் இதர செலவுகளுக்காக பணம் கொடுத்துச் செல்வார்கள். மேலும், தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலைக்குள் வேலைகளும் வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு கைதிகளுக்காக உறவினர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் தொகை மற்றும் ஊதியத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்குமாறு கைதிகளும் திடீரென்று சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விசாரிக்குமாறு சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஆய்வில், கைதிகளின் பணம் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பிரிவில் பணியாற்றி வரும் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஊழியர் வெற்றிவேல் என்பவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து வெற்றிவேல் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த முறைகேட்டில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வெற்றிவேல், முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு திங்கள் கிழமை (டிச. 10) விசாரணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும்படி உத்தரவிட்டார். இதற்கு அவகாசம் வழங்கும்படி மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீசார் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு (டிச. 12) ஒத்தி வைக்கப்பட்டது.