ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மீண்டும் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஆலையை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க பசுமைத் தீர்ப்பாயம் மறுத்து விட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இந்த மனு கடந்த 5-ம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இதுதொடர்பாக 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையை பராமரிக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழக அரசே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.