புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கடந்த ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சந்திரசேகர், தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சந்திரசேகர் தனது மனைவியுடன் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். பிம்ஸ் மருத்துவமனை செல்லும் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவர் மீது வெடிகுண்டை வீசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த தாக்குதலில் கீழே விழுந்ததில் சந்திரசேகர் மனைவி சுமலதா படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சந்திரசேகரின் மனைவி சுமலதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.