![dindigul district collector new announcement shops](http://image.nakkheeran.in/cdn/farfuture/NDbOBuYcpe9YPbEquO7WL9d31L7cvPGaeCy5dYaLsLc/1588732931/sites/default/files/inline-images/ias%20officers%208999.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்படும் என்றும், பிற கடைகள் செயல்பட உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் தொழில் வர்த்தகர் சங்கம் மற்றும் திண்டுக்கல் வர்த்தகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, "இந்த ஊரடங்கு மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. பிற இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்ற கடைகள் காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்படலாம். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டுமானம், சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
பணியின் போது கண்டிப்பாக சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். ஹார்டுவேர், சிமெண்ட், இரும்பு, எலெக்ட்ரிக்கல், மரக்கடை, அடகுக் கடைகள், வாகனப் பழுது நீக்கம் செய்யும் கடைகள், அலைபேசி பழுது நீக்கும் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், மிக்ஸி, குக்கர் பழுது நீக்கும் கடைகள், விவசாயம் சார்ந்த மின் மோட்டார் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் தினசரி காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்படலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்அனுமதி பெற்று வீடியோ புகைப்படம் எடுப்பவர்கள், எலெக்ட்ரிசியன், பிளம்பர், ஏசி மெக்கானிக், தச்சர் ஆகிய பணியாளர்கள் பணி புரியலாம். சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களிடம் முகக் கவசம், கிருமி நாசினி, பயன்படுத்தி பணிபுரிய அனுமதிக்கலாம்.
55 வயதுக்கு மேற்பட்டோர் இதய நோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களை ஏற்றிச்செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன அனுமதி பெற வேண்டும். கிடங்கில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு இரவு 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது" என்றார். இந்த ஆலோசனையில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.