மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பப் பெறக் கோரியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (02/02/2020) நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று (03/02/2020) இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சரும், திமுக கழக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து நகரிலுள்ள பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி, மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பரசு, வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதில் நகரில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை காட்டினார். இதில் திமுக நகர செயலாளர் வெள்ளச்சாமி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சக்கரபாணி பேசும்போது, "மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து இந்தியரின் குடியுரிமை மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் சொந்த நாட்டில் அனாதைகளாகவும், அகதிகளாகவும், வாக்குரிமை இல்லாதவர்களாகவும் ரேஷன் கார்டுகளை பறிகொடுத்து வரலாறு மாறும் நிலை ஏற்படும் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. எனவே இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து நத்தம், வத்தலக்குண்டு, வேடசந்தூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமைக்கு சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட அனைத்து பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை கையெழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.