அதிமுகவிற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய உடனே நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் தனித்து போட்டியிட்டார். அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை களமிறக்கினார். அப்பொழுது சுயேட்சை சின்னமாக இருந்த இரட்டை இலையில் மாயத்தேவர் போட்டியிட்டதின் மூலம் வெற்றி பெற்றார்.
அன்றிலிருந்து இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறது. அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருக்கும் வரை இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது கூட்டணி கட்சிக்கு ஒதுக்காத இந்த தொகுதியை தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.க.விற்கு ஒதுக்கியதின் பேரில் ஜோதிமுத்துவை வேட்பாளராக பா.ம.க. அறிவித்தது. இதனால் அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களும் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
அதோடு தேர்தல் பணியிலும் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து இருந்து வந்தனர். அதுபோல் தி.மு.க. சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயி கட்சியில் சாதாரண தொண்டருமான வேலுச்சாமியை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக ஐ.பி. பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கழகத் தலைவர் ஸ்டாலின் ஐ.பி.யின் பரிந்துரையின் பேரில் வேலுச்சாமிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டி போட சீட் கொடுத்தார். ஏற்கனவே 1984க்கு பிறகு தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டதால் உ.பி.க்களும் உற்சாகமாக தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகள் தி.மு.க வசம் இருந்ததால் இத்தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களான கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளரும், கொறடாவுமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினார்கள்.
அதன் அடிப்படையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்ற வாக்காள மக்களின் ஓட்டுக்களும் திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இப்படி வைக்கப்பட்டிருந்த வாக்காள மக்களின் ஓட்டுக்களை தான் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டதின் மூலம் தி.மு.க. வேட்பாளரான வேலுச்சாமி 7லட்சத்து 46ஆயிரத்து 523 ஓட்டுக்களும், அ.தி.மு.க. வேட்பாளரான ஜோதிமுத்து 2லட்சத்து 7ஆயிரத்து 551 ஓட்டுக்களும் வாங்கினார். இதன்மூலம் வேலுச்சாமி 5லட்சத்து 38ஆயிரத்து 972 வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே வேலுச்சாமி அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றதின் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான வினயிடம் சான்றிதழை பெற்றார். அதை மாவட்ட கழக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பி. தலைமையில் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட சில பொறுப்பாளர்களுடன் சென்னைக்கு சென்று கழகத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வெற்றி பெற்ற சான்றிதழை கொடுத்து ஆசி வாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. உறுப்பினரான வேலுச்சாமி.
ஆனால் இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் வேலுச்சாமி பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம் சட்ட்மன்ற தொகுதிகளில் டெபாசிட் கூட அ.தி.மு.க. வாங்கவில்லை அந்த அளவுக்கு தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சாதனை படைத்து இருக்கிறது.
இப்படி 35 வருடங்களுக்கு பிறகு திண்டுக்கல் தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தேர்தல் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்டச் செயலாளர் கொறடா சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியின் மூலம் திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கோட்டையாக உருவாகி இருக்கிறது!.