மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஓ.பன்னிர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா போட்டியிட விரும்பினார். இதனையடுத்து, தான் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திடமும், எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டிருந்தார். இதற்கு இருவரும் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் வேறொரு அதிமுக வேட்பாளரையும் நிறுத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த சூழலில் ஓ.ராஜா டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அவரும் ஆதரவு அளிப்பதாக கூறியதோடு, ஓ.ராஜாவை போட்டியின்றி வெற்றி பெற வைத்தார். தினகரன் ஆதரவில் ஓ.ராஜா தலைவர் பதவிக்கு வந்துள்ளார், ஓ.ராஜா கட்சியில் நீடித்தால் கட்சியில் எதிர்ப்பு வரும் என்று மதுரை மாவட்ட அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும், ஓ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவித்துள்ளனர். ஓபிஎஸ் தம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.