குடியுரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லிண்டென்தாலை கல்வி விசா காலம் முடிவதற்கு முன்னரே இந்தியாவை விட்டு வெளியேற்றியதை திமுக மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெரால்டு கண்டித்துள்ளார்.
மாணவர் ஜேக்கப்பை சென்னை ஐஐடி நிர்வாகமும் அழைத்து விசாரிக்கவில்லை. குடியேற்ற அதிகாரிகளும் முறைப்படி அழைத்து விசாரிக்கவில்லை. எந்த விதிகளையும் பின்பற்றாமல் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் கூட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.
அவர்கள் ஏன் இன்னொரு நாட்டு பிரச்சனைக்காக இங்கே போராடுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஒரு ஜெர்மன் மாணவர் விசா விதிகளையே மீறியிருந்தாலும் அவரை கண்டித்து எச்சரித்து படிப்பைத் தொடர அனுமதிக்காமல் அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது என்று ஜெரால்டு கூறினார். அவர் விசா விதிகளை மீறியதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதைக் காட்டிலும், அவர் கையில் வைத்திருந்த பதாகைக்காகவே வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்றே சக மாணவர்கள் கருதுவதாகவும் ஜெரால்டு கூறியிருக்கிறார்.