தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கவும், அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கரூரில் இன்று கல்வித்துறை ஊழியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பணிமாறுதல் கலந்தாய்வுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை ஆணையத்தால் வெளியிடப்படாததால், கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை என்பதை வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை ஊழியர்கள் சுமார் 100 பேர் கண்டன முழக்கத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏற்கனவே பணியில் உள்ள முதுநிலை ஊழியர்கள் பலரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.