தமிழகத்தில் கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் வேளையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றே தற்காப்பு நடவடிக்கை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1977 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி தலைமையில் முன்னாள் மாணவர்கள் நிலக்கோட்டை பகுதி முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டையில் இதுவரை 10 சதவீதம் பொதுமக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே நிலக்கோட்டை 100 சதவீத தடுப்பூசி செலுத்திய நகரமாக மாறும் வரை தங்களது பிரச்சாரப் பயணம் தொடரும் என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.