தர்மபுரி நகராட்சியில், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி நகராட்சியில் 33 கோட்டங்கள் உள்ளன. குடியிருப்புகள், இந்த நகராட்சியின் ஆண்டு வருமானம் 14 கோடி ரூபாய். இந்த வரி வருவாயைக் கொண்டுதான், நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம், உள்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வரி வசூலிப்பில் சுணக்கம் காணப்பட்டதால், தர்மபுரி நகராட்சிக்கு 14 கோடி ரூபாய்க்கு மேல் வரி நிலுவை ஏற்பட்டுள்ளது. அரசுத்துறை அலுவலகங்களும்கூட நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்தாமல் போக்குக் காட்டி வந்துள்ளன. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வரி நிலுவைகளால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி நகரம், புறநகர் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகப் பணிமனைகள் இதுவரை சொத்து வரியாக 33.23 லட்சம் நிலுவை வைத்திருக்கிறது. குடிநீர் வரி 48 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது.
தர்மபுரி பிஎஸ்என்எல் நிறுவனம் சொத்துவரி 27.66 லட்சம் ரூபாய், குடிநீர் வரி 17 ஆயிரம், குமாரசாமிப்பேட்டை இந்து சமய அறநிலையத்துறை சொத்து வரி 30 லட்சம், குடிநீர் வரி 18 ஆயிரம், கோட்டை கோயில் நிர்வாகம் சொத்து வரி 1.50 லட்சம், தர்மபுரி நகர காவல்நிலையம், காவலர் குடியிருப்பு, மகளிர் காவல்நிலையம், டிஎஸ்பி அலுவலகம் ஆகியவை மொத்தமாக சொத்து வரி 5.50 லட்சம், குடிநீர் வரி 86 ஆயிரம் ரூபாயும் தர்மபுரி நகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன.
இதுகுறித்து தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''வரும் மார்ச் 31ம் தேதிக்குள் 14 கோடி ரூபாய் வரி பாக்கிகளை முழுமையாக வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதை வசூலித்து முடிக்கும்வரை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அனைத்து விடுமுறை நாள்களிலும் வரி வசூலிப்பு பணிகள் நடைபெறும். இதற்காக சிறப்பு முகாமும் நடத்தப்படும்,'' என்றனர்.