உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களின் தாய்வீடு தமிழகம் தான். தமிழ்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் வரும். இது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி நீட் எதிர்ப்பு வரை தொடர்கிறது. போராட்டங்களையும் தாண்டி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள தமிழ்சங்கங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதையும் தாண்டி சில வெளிநாட்டு அமைப்புகளும் உலகளவில் மக்களுக்காக சேவையாற்றி வருபவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து வருகின்றது. அந்த வகையில், 'அமெரிக்கன் மனிதநேய சங்கம்' சார்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 'மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது.

இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. முதல் விருதினை ஆன்டன் ஜே கார்ல்சன் (Anton J. Carlson) பெற்றார். இவ்விருதினை ஜேம்ஸ் ரண்டி(James Randi), பால்கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் இர்னி சேம்பர்ஸ் (Ernie Chambers) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 1996ஆம் ஆண்டு புகழ்பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்கா வாஷிங்டனில் 21.9.2019 மற்றும் 22.9.2019 இரு நாள்கள் நடைபெறும் பன்னாட்டு மனித நேய - சுயமரியாதை மாநாட்டின் இரண்டாம் நாளான 22.9.2019 ஞாயிறு அன்று இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு (வாஷிங்டன் நேரப்படி காலை 9:00 மணி) இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்வமைப்பின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருதினை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலிருந்தும் மனிதநேய அமைப்பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பல்வேறு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் பங்கேற்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளார்.