தண்ணீர் லாரிகள் மோதியதால் ஏற்பட்ட விபத்துகள், அதில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 24ஆம் தேதி 10 சக்கரங்களை கொண்ட அதிக அளவில் தண்ணீர் ஏற்றும் டாரஸ் வகையான லாரி சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகே வந்தபோது சிக்னல் முடிவதால், லாரி ஓட்டுநர் பாலச்சந்திரன் திடீரென திருப்பியுள்ளார்.
அப்போது சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த சேத்துபட்டை சேர்ந்த மகேஷ், அவரது தாயார் நிர்மலாவுடன் சகோதரி திருமணத்திற்காக அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆவடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பொன்னாம்பேடு, பருத்திப்பட்டு, நாராயணபுரம் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர் லாரிகள் மூலம் உறிஞ்சப்படுவதாகவும், அதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் பொன்னம்பேடு கிராம பொதுநல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது " டேங்கர் லாரி மோதி தாய் மகன் பலியான சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்தனர். இதுபோல தண்ணீர் லாரிகள் ஏற்படுத்திய விபத்துகள், அதில் காயமடைந்த மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், தண்ணீர் லாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறைகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.