மீண்டும் பட்டணப் பிரவேசம் நடத்துவதற்கு முதலமைச்சர் அனுமதித்திருப்பதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை குத்தாலத்தில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம், "மீண்டும் இந்த பட்டணப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள். சம்பிரதாயப்படி நடக்கும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பட்டணப் பிரவேசம் நடத்த முதலமைச்சர் வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளார். சம்பிரதாயங்களில் அரசுக்கு மாறுபாடு இல்லை என்பதை இது காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
வருகிற மே 22- ஆம் தேதி அன்று பட்டணப் பிரவேசம் நடத்தப்படுமென பல்வேறு ஆதீனங்கள் அறிவித்திருந்த நிலையில், விழா நடைபெற உள்ளது. மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு ஆதீனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள் சந்தித்த நிலையில், தருமபுரம் ஆதீனம் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.