நெல்லை மாவட்டத்தின் அம்பை நகரையொட்டிய தென்மேற்கு தொடர்ச்சி மலையின் சுமார் 6500அடி உயரத்திற்கும் மேலான அகஸ்தியர் மெட்டுப் பக்கமுள்ள சதுப்பு நிலக் காடுகளில் உற்பத்தியாகிப் பெருகித் தரையிறங்குகிறது வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. அது முதன் முதலாகத் தலையணை வழியாகத் தரையிறங்கி பாபநாசம் வழியாகப் பாய்கிறது. நெல்லை,தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதராமாகவும் பயன்பாட்டிலிருந்த தாமிரபரணி பின்பு ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்ப்பதில் உயிர்நாடியாகவே இருக்கிறது.
காலம் காலமாகக் கோடை மற்றும் மழைக்காலங்களில் நிறம் மாறாத தாமிரபரணியின் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக மக்களின் பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்பட்டதில் மண்கலந்த செந்நிறமாக வந்திருக்கிறது. ஆரம்ப கட்ட வி.கே.புரம் பகுதி தொடர்ந்து வடபக்கமான தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரம் வரை சப்ளையானதில் தண்ணீர் செந்நிறமாக காணப்பட்டது மக்களிடையே கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது.
முன்னெப்போதும் இப்படி வந்ததில்லை தண்ணீருடனிருக்கும் இந்தப் பாத்திரத்தைங்களைப் பாருங்கள் சிகப்பாகவே இருக்கிறது. அதைக் குளிப்பதற்கோ,முக்கியமாகக் குடிப்பதற்கோ எப்படிப் பயன்படுத்த முடியும். பயமாக இருக்கிறது என்கிறார் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காயத்ரி. இதனிடையே சில இடங்களில் இந்த செந்நீரைக் கொண்டு குளித்த போது உடலின் தோல் பகுதியில் அரிப்பு எடுக்கிறது என்கிற புகாரும் அம்பைப் பகுதியின் அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தாகவும் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற புகார்கள் கிளம்பிய உடனேயே நெல்லை மாவட்டக் கலெக்டரான ஷில்பா அதிகாரிகளை அனுப்பி உடனடி ஆய்வு நடத்தப் பணித்திருக்கிறார்.
கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் விவசாயம் பொருட்டு சேர்வலாறு, காரையாறு அணைப்பகுதிகளிலிருந்து பயன்பாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அணையின் நீர் இருப்பு கோடை வறட்சி காரணமாகக் குறைந்தது. காரையாறு அணையின் அடிப்குதியில் உள்ள மதகிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் அணையின் கீழ்ப்பகுதியில் சேர்ந்துள்ள சகதி,மண்,இலை,தழைகள் மற்றும் மட்கிப் போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது. ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. அதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக தாமிரபரணி நீர் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது. எனவே பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கிறார் நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பா.
ஆனாலும் நீரின் நிறம் எப்போது இயல்பு நிலைக்கு வருமோ என்கிற அச்ச உணர்வு மக்களை விட்டகலவில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.