சென்னையில் வசிக்கும் நாகை வட்டார மக்களை இணைத்து நாகை நலன்புரி சங்கம் என்ற பெயரில் சேவை அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நாகை எமஎல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி,
நாகை, நாகூர், காரைக்கால் உள்ளிட்ட நாகை கடலோர மாவட்ட மக்களுக்கு என்று தனி பாரம்பர்ய வரலாறு உண்டு. தென்னாசிய அலைகடலில், சொந்த கப்பல்கள் செலுத்தி பன்னாட்டு வணிகம் செய்தவர்கள் அவர்கள்.
அவர்களின் கடல் சாம்ராஜ்யத்தை கண்டு போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகமாவே வியந்தார். அச்சிறப்புமிக்க நம் முன்னோர்களின் கல்லறைகள் இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேஷியா என அங்கெல்லாம் சாட்சியங்களாக இருந்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வரலாற்றின் வழியே நாம் எதிர்காலத்தை நோக்கி புதிய வரலாற்றை படைக்க பயணிக்க வேண்டும். இக்காலம் நெருக்கடிகள் சூழ்ந்ததாக இருக்கிறது. நாம் வாழும் இடத்தின் சூழலை புரிந்து அதற்கேற்ப வாழ்வியலை அமைப்பது தான் புத்திசாலித்தனமானது.
வெறுப்பை வேறறுக்க அன்பை விதைக்க வேண்டும். சங்பரிவாரங்களுக்கு 5 சதவீத மக்கள் கூட ஆதரவளிப்பதில்லை. நம்மோடு வாழும் இந்து சமுதாய மக்கள் இணக்கத்தையே விரும்புகிறார்கள். இதைப் புரிந்து சிறுபான்மை சமூக மக்களும் அவ்வாறே பயணிக்கிறார்கள்.
கஜா புயல் தாக்கிய பிறகு முஸ்லிம் சமூகம் ஆற்றிய மனிதநேய சேவைகளை எல்லா மக்களும் கிராமம், கிராமமாக போற்றுகிறார்கள். மஜகவின் சார்பில் 10 நிவாரண முகாம்கள் மூலம் 1 1/2 கோடி மதிப்புள்ள உதவிப் பொருள்களை 4 மாவட்டங்களில் வினியோகித்துள்ளோம்.
சில இடங்களில் பாஜகவினர், "இந்த, இந்த இடங்களுக்கெல்லாம் கொடுங்கள்" என்று வழிகாட்டினார்கள். இதுபோல் மாற்றாரின் உள்ளங்களை அன்பான சேவைகளால் வென்றெடுக்க வேண்டும். இன்றைய சூழலில் நாட்டுக்கு இதுதான் தேவை.
பல சமூக மக்களிடையே இணக்கத்தையும், அன்பையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதனால் தான் தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்திகளை வெளியிடுகிறோம். மற்றவர்கள் பெருநாள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். அது உறவை மேம்படுத்துகிறது.
சமுதாய ஒற்றுமையையும், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் கெடுக்க நினைப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும். குறிப்பாக சமூக இணையதளங்களில், பொறுப்பற்றத்தனமாக சிலரும், விளம்பர நோக்கில் சிலரும் பதியும் கருத்துகள் பேராபத்துகளை விளைவிக்கின்றன. இதனால் களத்தில் இறங்கி பணியாற்றுபவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.
அமைதியான சமூக சூழலை உருவாக்க, அரசியல் பேதங்களை கடந்து எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும். நமது நாகை நலன்புரி சங்கம் 5 லட்சம் மதிப்பில் புயல் பாதித்த பகுதிகளில், சாதி மதம் பாராமல் நிவாரணப் பொருள்களை வழங்கியது பாராட்டுக்குரியது.
இச்சங்கம் சார்பில் நாகையில் குறைவான கட்டணத்துடன் கூடிய ஒரு மருத்துவமனையை கட்டி அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் MGK. நிஜாமுதீன், சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் உள்ளிட்டோரும் உரையாற்றினர். சென்னை வாழ் நாகை நலன்புரி சங்க நிர்வாகிகள் பேராசிரியர் ஷேக் அலாவுதீன், முஹம்மது யூசுப் மாலிம், பேராசிரியர் அகமது மரைக்காயர், அப்துல் காதர் மாலிம், ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.