தமிழகத்தில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் குறைந்துள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். வதந்தி பரப்பிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்.
ஹோலி பண்டிகையைக் கொண்டாடவே புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கலாம். அதில் அவர்களுக்குள் ஓரிரு சிறிய சண்டைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. வதந்திகளைப் பரப்புவதால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும். இந்த விவகாரத்தில் தற்போது பதற்றம் குறைந்துள்ளது. வதந்தி பரப்பியவர்களைப் பிடிக்க டெல்லி, பீகார், ம.பி உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்” என்றார்.