Skip to main content

அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் பொன்முடியின் வழக்கும்; பின்னணியும்!

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

Details investigated minister Ponmudi case  Enforcement Department

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006 -2011 ஆம் ஆண்டுவரை கனிமவள அமைச்சராக இருந்த பொன்முடி தனது உறவினர்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும், விதிகளை மீறி செம்மண் அள்ளியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் முறைகேடாக ஈட்டிய ரூ.28 கோடி பணத்தின் மூலம் என்னென்ன சொத்துகள் வாங்கப்பட்டன, எதில் முதலீடு செய்யப்பட்டன என்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்த பண்டத்தில் அமைச்சர் மகன் கௌதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடுகள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். தற்போது இந்த வழக்கின் அடிப்படியில்தான் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி ஆகியோர்களின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்