தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வரும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று ஒலிம்பியாட் குறித்த விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை அழித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் குறித்து தமிழக முழுவதும் விளம்பரப் பதாகைகளை தமிழக அரசு ஒட்டி வந்துள்ளது. அந்த வகையில் சென்னை முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ள பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் மோடியின் படம் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த பிஜேபி கட்சியைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியின் தலைமையில் பதாகையின் மீதும் பிரதமர் மோடி படத்தை ஒட்டியுள்ளனர்.
இதைக் கண்டித்து சென்னை முழுவதும் விளம்பர பதாகையின் மீது ஒட்டப்பட்ட மோடியின் படத்தை கருப்பு மை கொண்டு அழிக்கும் பணியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்துள்ளது. கோட்டூர் புரம் பேருந்து நிறுத்தம், அடையார் சிறுவர் காந்தி மண்டபம், பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களிலும் அழித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த காவல்துறை தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சசிகுமார், அரவிந்த், சாரதி என மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாளை பிரதமர் தமிழகம் வரும் சூழ்நிலையில் இந்த கைது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கூறுகையில், 'தமிழக அரசு செய்த விளம்பரத்தின் மீது அத்துமீறி மோடியின் படத்தை ஒட்டி, சேதப்படுத்திய, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல். அதை எதிர்த்துப் பாதுகாத்த இந்த மாணவர்களின் மீது வழக்கு தொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும். உடனடியாக காவல்துறை அவர்களை விடுவிக்க வேண்டும்' என்றார்.