மாயமான வருமான வரித்துறை துணை ஆணையாளர் மீட்பு
தமிழக முன்னாள் காவல்துறை அதிகாரி ஐ.ஜி.செண்பகராமன் மகன் சிவக்குமார் (வயது-38). இவர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். பீளமேடு சேரன்மாநகர் கவுதமபுரி பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 13–ந்தேதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிவக்குமார் திடீரென்று மாயமாகி விட்டார். அவர் வீட்டைவிட்டு செல்லும்போது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, செல்போன் மற்றும் அடையாள அட்டைகளை வீட்டில் வைத்துவிட்டு, ரொக்கம் ரூ.15 ஆயிரம் மற்றும் சில துணிமணிகளை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து சிவக்குமாரின் குடும்பத்தினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டது.
இந்த நிலையில், நேற்று மதியம் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரை அடுத்த அச்சமங்கலம் என்ற கிராமத்தில் ஊர்க்காவல்படை வீரர் ஒருவரது வீடு அருகே சோர்வான நிலையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார்.
அவரிடம் அந்த ஊர்க்காவல்படை வீரர் விசாரித்தபோது, அவர் சிவக்குமார் என்பதும், கோவை வருமானவரித்துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் பர்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர். முகத்தில் லேசான காயத்துடன், சோர்வான நிலையில் இருந்த அவரை அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் சிவக்குமார் மீட்கப்பட்டது குறித்து அவருடைய உறவினருக்கு பர்கூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவக்குமாரை சென்னையில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
சிவக்குமார் திடீரென்று மாயமானது ஏன் என்பது தெரிய வில்லை. அவர் கோவையில் இருந்து எங்கு சென்றார்...? பர்கூருக்கு வந்தது எப்படி...? நடந்து சென்றாரா...? என்பது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெ.சுப்பிரமணியம்