மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது. அகில இத்திய பார் கவுன்சில் உத்தரவுப்படி, இந்த தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக - ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்புமனு தாக்கல் செய்து அதில் தகுதி பெற்ற வேட்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க கோரும் துண்டு பிரசுரங்கள், என்னை தேர்வு செய்தால், என பல தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது கூடாது. அதேபோல் சமூக வலைதளங்களில் தங்களுக்கு வாக்களிக்கும் படி தகவல் பரப்புவது உள்ளிட்ட எவ்விதமான விளம்பரங்களும் மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி தேர்தல் விதிமுறை சட்டம் 2018ன் படி உத்தரவிட்டார்.
இந்த தடையால் பார் கவுன்சில் உறுப்பினர் தேர்வுக்காக வாக்களிக்க உள்ள வழக்கறிஞர்க ளுக்கு தகுதியான வேட்பாளார் யார் என தெரியாமல் போய்விடும். மேலும் இந்த தடை, அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் வெளியிடுவது, சமூகவலை தளங்களில் ஆதரவு கோருவது உள்ளிட்ட பிரசாரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விதித்துள்ள தடையை நீக்கி அல்லது ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்திய நாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரச்சாரம் செய்தால்தான் வேட்பாளர்களைப் பற்றி வாக்காளர்களுக்கு தெரிய வரும். அப்படி பிரசாரத்திற்கு தடை விதித்தால், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள் பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிடுவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இது போன்ற வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளையும் வழங்கியுள்ளது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.