தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.
உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாமகவின் அன்புமணி ராமதாஸ், 'உதயநிதி பணி சிறக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும் எனது விருப்பங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்ற நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், ''ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆகவே அவருக்கு திறமை இருப்பதால் தான் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எளிமையாக பழகுகிறார். எளிமையாக மக்களிடம் அணுகுகிறார். ஆகவே இதனை அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் வரவேற்கிறார்கள். குறை சொல்பவர்கள் எரிச்சலாலும் பொறாமையிலாலும் சொல்லலாம். ஐந்து வருடம் தமிழகத்தை ஆள்வதற்கு மக்கள் திமுகவிற்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். திமுக தான் தீர்மானிக்க வேண்டும் யார் முதலமைச்சர்? யார் துணை முதலமைச்சர்? என்று அதில்போய் தலையிட்டுக் கொண்டு இவருக்கு ஏன் கொடுத்தீர்கள்? அவருக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதற்கில்லை. அப்படி பார்த்தால் நாடாளுமன்றத்தில் அமைச்சராக இருப்பவர்களெல்லாம் ஊழல் கறை படிந்த கைகளாக இருக்கிறார்கள். நிதியமைச்சர் மேல கர்நாடகாவில் எஃப்.ஐஆர் போட்டுள்ளார்கள் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுத்ததை காங்கிரஸ் வரவேற்கிறது'' என்றார்.
அதேபோல் விசிகவின் திருமாவளவன் தெரிவிக்கையில், ''தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக ஒரு குறை பட்டியல் சமூகத்திற்கு உண்டு. மக்கள் தொகையில் மிக கணிசமான அளவில் உள்ள ஒரு சமூகப்பிரிவினர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லையே என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் உயர்கல்வி துறையை ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த உறுப்பினருக்கு வழங்கி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் அதை வரவேற்று பாராட்டுகின்றனர். கூட்டணி கட்சிகள் விடுதலை சிறுத்தைகளும் அதை வரவேற்கிறோம். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனச் செய்ததை நாம் அறிவோம். கலைஞருக்கு ஸ்டாலின் எவ்வாறு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாரோ, அதைப்போல இன்றைக்கு ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினும் உற்றத் துணையாக இருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.
ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''உதயநிதி ஸ்டாலினுக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் மிகச் சிறப்பாக செய்யக்கூடியவ.ர் கலைத்துறையில் இருக்கும் பொழுது கூட சிறப்பாக பணியாற்றியவர். பிறகு அமைச்சராக விளையாட்டுத் துறையை ஏற்று, இந்த ஒரு வருட காலத்திற்குள் நல்ல பல விஷயங்களை விளையாட்டுத்துறையில் செய்திருக்கிறார், உலக அளவில் நடைபெறுகின்ற கார் ரேஸை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. அதே துணை முதல்வராக கண்டிப்பாக மிகச் சிறப்பாக பணியாற்றுவார். அவருடைய தந்தையாருடைய மன உறுதியும், தைரியமும் அவருடைய தாத்தாவுடைய கடுமையான உழைப்பும் இவருக்கு கண்டிப்பாக அமையும். அமைய வேண்டும் என விரும்புகின்றேன்'' என தெரிவித்துள்ளார்.