சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத 11248 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஏடீஸ் எஜிப்ட் என்னும் ஒரு வகை கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் சாக்கடைக் கழிவுநீரில் உற்பத்தி ஆவதில்லை. மாறாக, தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில்தான் உற்பத்தி ஆகின்றன.
ஆகையால், வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் மழைநீர் தேங்கும் வண்ணம் தேங்காய் சிரட்டைகள், உரல்கள், பிளாஸ்டிக் குவளைகள், பாலிதீன் பைகள், பழைய டயர்கள், திறந்தநிலையில் உள்ள காலி பாட்டில்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்துமாறு சுகதாராத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை பரப்பும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காக 11248 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட சுகாதாரத்துறை.
இதுகுறித்து, சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர் நிர்மல்சன் கூறுகையில், ''டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேபோல், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது மட்டுமின்றி, தன் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். தும்மல், இருமல் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.