Skip to main content

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி! ரங்கசாமிக்கு எதிராக குமுறும் கட்சி நிர்வாகிகள்!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம்  சபாநாயகரானார். பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினரானார். அதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து காமராஜ் நகர் தொகுதி காலியானதால் வருகிற 21-ஆம் தேதி  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

pondicherry by election confusions

 

 

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சிகள் மும்முரம் காட்டின. காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு முன்னாள் எம்.எல்.ஏவும், டெல்லி மேலிட பிரதிநிதியுமான ஜான்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதேசமயம் எதிரணி தரப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதலில் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடம் வந்த அ.தி.மு.க போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க போட்டியிடக்கூடும் என்ற எதிபார்ப்பு இருந்தது. இவ்விரு கட்சிகளும் விருப்ப மனுக்களையும் பெற்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை சென்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தொகுதியை வாங்கினார்.

இதனால் அ.தி.மு.க, பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் என கூட்டணிக்குள் குழப்பம் எழுந்து பின்னர் சமரசமாகினர்.

இந்நிலையில் 2016 தேர்தலில் போட்டியிட்ட  நேரு தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு அவரும் இரண்டு நாட்களாக பிரச்சாரமும் செய்தார். அதனால் அ.தி.மு.க எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், ‘கூட்டணி கட்சியினரை ஆலோசிக்காமல் நேரு எப்படி தனியாக பிரசாரம் போகலாம்?’ என விமர்சித்தார். இதனிடையே நேருக்கு சீட் இல்லை என தெரிய வந்தது. இதனால் ஆவேசமடைந்த நேரு நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது ஆதங்கத்தை கொட்டினார்.

அப்போது அவர், “2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தவுடன் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்தனர். அதன்பின்னர் கட்சியின் செயல்பாடுகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது அனைவரையும் ஆலோசித்து நல்ல வேட்பாளரை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் கட்சி தலைமை முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. இது குறித்து கட்சி தலைவரிடம் கேட்டால் தேர்தல் வரட்டும், பார்க்கலாம் என்று கூறினார். கடைசி நேரத்தில் கட்சி பணிகளில் பழக்கம் இல்லாத இளைஞரை வேட்பாளராக நிறுத்தினார்.

ஆனால் மூத்த, அனுபவம் வாய்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். என்ஆர் காங்கிரசின் தோல்விக்கு கட்சி தலைமையின் அலட்சியம்தான் காரணம்.  இதனால் தற்போது கட்சி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கிடையே பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள், உண்மையான தொண்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கட்சியை வளர்த்து எடுக்க துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். மேலும் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறினார்கள். அங்கு வெற்றி பெற்றால்தான் 2021 தேர்தலில் கட்சி வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தனர். அனைவரும் கூறினால் போட்டியிட  முடிவு செய்தேன்.

இதையடுத்து தேர்தலுக்கு தயார் செய்யும் நோக்கில் நல்ல நாளில் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்தேன். கூட்டணியில் உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள்  தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாவிட்டாலும் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகின்றன. வையாபுரி மணிகண்டனின் குற்றச்சாட்டை என்.ஆர்.காங்கிரஸ் தலைமை தட்டிக்கேட்கவில்லை. அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் என்.ஆர்.காங்கிரஸ் வழிநடத்தப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தால் அவர்களை ரங்கசாமி சந்தித்து பேசுவது இல்லை. ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் வந்தால் நேரம் ஒதுக்கி மணிக்கணக்கில் பேசுகிறார். என்னை குறை கூறும் அதிமுகவினரை ஒரு கேள்வி கேட்கிறேன். புதுச்சேரியில் மாநில செயலாளர் புருஷோத்தமனை மதிக்கிறீர்களா? கட்சி தலைமை அலுவலகத்தில்கூட அவரை வைத்து விழாக்களை நடத்துவது இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு டிடிவியிடம் ஆதாயம் தேடினீர்கள், அடுத்து ஓபிஎஸ்சிடம் ஆதாயம் தேடுனீர்கள், அதற்கு அடுத்து இபிஎஸ்சிடம் ஆதாயம் தேடுனீர்கள். அதிமுகவிடம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

கூட்டணி கட்சியினரால், சொந்த கட்சியினர் அவமானப்படுத்தப்படுவதை கட்சி தலைமை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கக் கூடாது. என்.ஆர்.காங்கிரசை நம்பி வந்தவர்களை கைவிட்டு விடக்கூடாது.  கட்சி தலைமை அதிமுகவின் தலையாட்டி பொம்மையாக இருக்கக்கூடாது. ரங்கசாமியின் விருப்பத்தை நிறைவேற்ற எவ்வளவோ பேர் உள்ளனர். அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ரங்கசாமி தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ரங்கசாமி தன்னை ஒன்மேன் ஆர்மியாக நினைத்துக்கொண்டு கட்சிக்காரர்களின் கருத்துகளை அறியாமலே வேட்பாளரை தன்னிச்சையாக தேர்வு செய்து, வெளிப்படையாக அறிவிக்காமல் ஜவ்வாக இழுத்து அதற்குள்ளாக ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திப்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.  என். ஆர் காங்கிரஸ்  ஜனநாயக முறையில் கட்சியை நடத்த வேண்டும் என்பது கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அது பொதுமக்களின் விருப்பமாகவும் இருக்கிறது” என்று ஆவேசமாக கூறினார்.

இன்று வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் வரை வேட்பாளரை  அறிவிக்காமல் ரங்கசாமி மவுனமாக இருப்பது கட்சிக்காரர்களிடையேயும், கூட்டணியினரிடையேயும், மக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

 

சார்ந்த செய்திகள்