டெங்கு காய்ச்சலால் 4 வயது குழந்தை உயிரிழந்ததையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் அப்பகுயில் ஆய்வு செய்தார்.
சென்னையை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் பேரல்கள், கால்வாய்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தமிழகத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் நாளை (12.09.2023) ஆலோசனை நடத்த உள்ளார். இது மட்டுமின்றி செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்கள், மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.