தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் திருநங்கைகள் மற்றும் திருநர்கள் இணைந்து இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநங்கை மற்றும் திருநர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்த நிலையில், இத்துறையின் கீழ் வருகின்ற திருநங்கை, திருநர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இது குறித்து பேசிய திருநங்கை கிரேஸ்பானு, “திருநங்கைகள் டி.என்.பி.சி, டி.ஆர்.பி போன்ற போட்டித்தேர்வுகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணி அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் எங்களுக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் போனதே. எங்களுடைய சமூகத்திற்கு அங்கிகாரம் முதன்முதலில் கொண்டுவந்தது திமுகவின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். தமிழகத்தில் முதன்முதலாக கொண்டு வரவேண்டிய இட ஒதுக்கீட்டை கர்நாடக மாநிலம் கொண்டு வந்தது. 1 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதை இன்று நடைபெறும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் பேசி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும்” என்றார்.