கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் பெண்ணாடத்தில் மகளிர் அணி சார்பில், ‘உடல் நலத்தைக் கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியைத் திணிக்காதே’ என தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (29.03.2023) புதன்கிழமை மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க உள்ளது. இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் என்றும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இருப்புச் சத்து அதிக அளவு இருக்கும், இது அனைவருக்கும் சேராது. ஏற்கனவே நாம் உண்ணும் உணவில் முருங்கைக்கீரை உட்பட பல்வேறு கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அப்படி இருக்கும் போது மேலும் இரும்புச்சத்து அதிகம் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதால் அதை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் உருவாகும்.
எனவே எப்போதும் வழங்கப்படும் அரிசியே வழங்க வேண்டும் (இது குறித்து நமது நக்கீரன் இதழில் சமீபத்தில் பரிசோதனை எலிகளா தமிழக மக்கள் என்ற தலைப்பில் செய்தியும் வெளியிடப்பட்டது) என்பதை வலியுறுத்தி கனிமொழி இயற்கை வழி வேளாண்மை அமைப்பைச் சேர்ந்த மகளிர் அணியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஞானம், இராசேசுவரி அமைப்பு குழு உறுப்பினர் மு. வித்யா, செயற்குழு உறுப்பினர்கள் க. இந்துமதி, வே. தமிழ்மொழி, முன்னாள் கிளைச் செயலாளர் ப. எழிலரசி, தோழர்கள் மா. விருத்தாம்பாள், பி. சாந்தலெட்சுமி, ம. மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் க. முருகன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மு. செந்தமிழ்ச்செல்வி, தமிழக உழவர் முன்னணி பொருளாளர் அரா. கனகசபை, நல்லூர் ஒன்றிய தலைவர் சி. பிரகாசு, பாவலர் சிலம்புச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். த. பரிமளா நன்றி உரையாற்றினார். நிகழ்வில், பேரியக்க உறுப்பினர்கள், மகளிர் ஆயம் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் எனத் திரளாகப் பங்கேற்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு வழங்க உள்ள இந்த செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு நல்லது செய்யுமா கெட்டது செய்யுமா வரும் காலங்களில் தெரிய வரும் என்கின்றனர் பலர்.