Skip to main content

வயது முதிர்ந்த தாய் கொலை... பராமரிக்க முடியவில்லை கொன்றேன் - மகன் வாக்குமூலம்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020
 

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள செட்டிமேடு இந்திரா காலனியைச் சேர்ந்த பிச்சையா மனைவி சுடலையம்மாள் (90) இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள். மகள்கள் இருவரும் திருமணமாகி ஆலடியூர், கோடாரங்குளத்தில் வசிக்கின்றனர். மூத்தமகன் முருகன் (50), இளையமகன் ராஜேந்திரன் என்ற ராஜன் (45), விவசாய கூலிகளான இருவரும் செட்டிமேட்டில் வசிக்கின்றனர். ராஜேந்திரன் மாற்றுத் திறனாளி என்பதால் முருகன் தான் தாயை பராமரித்து வந்தார்.

 

defeat incident in nellai.. son confession

 

இந்நிலையில் பிச்சையா இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சுடலையம்மாள் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக மிகவும் தளர்ந்து விட்டதால் தவழ்ந்து சென்றே தனது அத்தியாவசிய பணிகளை செய்த வந்தார். கடந்த மாதம் பெய்த மழையால் இவரது குடிசை ஒழுகியது. இதையடுத்து அருகிலுள்ள உறவினர் சாந்தி வீட்டில் தங்கியிருந்தார். வெளியூர் சென்றிருந்த சாந்தி கடந்த வாரம் ஊர் திரும்பியதையடுத்து சுடலையம்மாள் மகன் முருகன் வீட்டில் வசித்து வந்தார். 

 
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் இறந்தார். இறுதி சடங்கிற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், வி.கே.புரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த போனில் மூதாட்டி சாவில் மர்மம் உள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து வி.கே.புரம் எஸ்.ஐ.க்கள் மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சுடலையம்மாள் உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுடலையம்மாள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது. தெரியவந்தது. வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி நடத்திய விசாரணையில் முருகன் தான் தாயை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அடையக்கருங்குளத்தில் முருகன் பதுங்கியிருப்பதாக வி.ஓ.ஏ. ஆறுமுகம் கொடுத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முருகன் தனது வாக்குமூலத்தில் தாயை பராமரிக்க முடியாததால் கழுத்தை நெரிந்து கொன்றதாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான முருகனுக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவியும் 6 மகன்கள் 2 மகள்களும் உள்ளனர்.\
 
 
 

சார்ந்த செய்திகள்