கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே சமயம் தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பொன்முடி இழந்திருந்தார். இதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவில், “இந்த வழக்கை பொறுத்தவரையில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரணை செய்யவில்லை. ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நீதிபதி சதீஷ் சந்தர வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலி என அறிவிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சி. விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.