நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மகனை அழைத்து சென்ற திருத்துறைப் பூண்டி விளக்குடியை சேர்ந்த தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என்றும் கூறினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் வைகோ புதிய பேருந்து நிலையம் அருகில் கட்சிக் கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் மாநில விவசாய அணி செயலாளர் முருகன் மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ’’தமிழக மக்கள் இந்தியாவின் அனாதைகளா, படிக்க வசதியில்லாத நிலையிலும், குடும்பத்துயரங்களை தாண்டி அரசு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்ற அனிதா,பாழாய் பொன நீட் தேர்வில் வெற்றிப்பெற முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டார். அதே போல இன்று மகனை நீட் தேர்வு எழுத தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலம் ஏர்னாகுளத்திற்கு அழைத்து சென்ற தந்தை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் வஞ்சக செயல், மாநில அரசின் கையாளாகாத செயல்.
கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு எதிராக, போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. தமிழக மாணவர்களை தமிழகத்திலேயே தேர்வு எழுதவிடாமல் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எழுதவைத்துள்ளனர். 200 கிலோ மீண்டர் தூரம் பயணித்த கலைப்பு, தேர்வு இடத்தை தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து பிள்ளையை தேர்வுக்கு அனுப்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் பக்பக் என்றே இருந்திருக்கும், அதன் விளைவு மாரடைப்பாகியிருக்கிறது. நீட் க்கு எதிராக போராடிய நாம் இனி தமிழகத்தில் சென்டர் வேண்டும் என போராட வேண்டிய நிலையாகிவிட்டது.
ஆக, மத்திய, மாநில அரசுகளின் திட்டம் லாவகமாக நடைமுறைக்கு வருகிறது’’ என்றார்.