வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மசூதி தெருவை சேர்ந்தவர் சுக்காராம். இவரது மகன் 29 வயதான அசோக்குமார். இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் சத்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மனைவி ஜோலார்பேட்டையில் இருக்க அசோக்குமார் மட்டும் சென்னையில் பணி புரிந்து வருகிறார். விடுமுறை கிடைத்ததும் ஊருக்கு வந்து மனைவியை, பெற்றோர்களை பார்த்துவிட்டு செல்வார்.
இவருக்கு ஆயுதபூஜை முடிந்ததும் கடந்த அக்டோபர் 22ந்தேதி விடுமுறை விட்டுள்ளனர். அதனால் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார். இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வரலாம் என திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்படி சென்றபோது, திருப்பத்தூர் அருகே பக்கிரிதக்கா மசூதி அருகே செல்லும்போது எதிரே வந்த பொலிரோ கார் அசோக்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் தலையில் அடிப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்பொழுது வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பொதுமக்கள் ஹெல்மெட் போடவேண்டும் என காவல்துறை வலியுறுத்திவருகிறது. இதற்காக சாலையில் நின்று சோதனை என்கிற பெயரில் வாகனஓட்டிகளை டார்ச்சர் செய்கிறார்கள், பணம் பிடுங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் காவலர் ஒருவர், தலைக்கு ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.