கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் பலநாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவைக் கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவைக் கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி கடந்த 9 ஆம் தேதி காலையில் இருந்து இன்று வரை அதற்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
முதற்கட்டமாக சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு கடந்த 10ம் தேதி காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மிதவைப் படகு மூன்று இடங்களில் சேதமடைந்தது தெரிந்து அதைச் சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவைப் படகின் மூலம் மிதவைக் கப்பல் இழுக்கப்பட்ட போது கயிறு அறுந்துவிட்டது.
தொடர்ந்து சாய்ந்து வந்த கப்பல் தொடர்ந்து சாயாமல் இருக்க நான்கு புறமும் நங்கூரம் இடப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் இரவு பகலாக சுமார் 300 மீட்டர் நீளம் வரை கடலில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தூண்டில் வளைவு போன்ற பால அமைப்பை உருவாக்கினர். அந்தத் தூண்டில் பாலம் வழியாக ஹைட்ராலி தொழில்நுட்பம் கொண்ட 128 டயர்கள் கொண்ட ராட்சத லாரி கொண்டு செல்லப்பட்டு 310 டன் எடைகொண்ட இரண்டு ஸ்டீம் ஜெனரேட்டர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது.