ரயில் பயணங்களில் முன்பதிவு செய்து படுக்கை வசதியுடன் பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்லலாம் என்பது பொதுவாக உள்ளது. ஆனால் சமீப காலங்களாக முன்பதிவு பெட்டியில் தான் அதிகளவு கொள்ளை நடக்கிறது. குறிப்பாக ஈரோடு வழி ரயில் பயணம் என்றால் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இரவு நேரத்தில் தான் இந்த கொள்ளை சம்பவங்கள் பெருமளவு நடக்கிறது. அதிலும் பெண்கள் மட்டுமே கொள்ளையர்களால் குறி வைக்கப்படுகிறார்கள். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்யும் மர்ம நபர்கள் பெண்கள் அசந்து தூங்கும் போது திட்டமிட்டு அவர்களின் தாலிக்கொடியை தங்க செயினை அறுத்துக்கொண்டு ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் தப்பிவிடுகிறார்கள்.
கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏறக்குறைய 100 சவரன் நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளார்கள். இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக ரயில்வே போலீசார் தனித்தனி குழுக்கள் அமைத்து அதில் சில வடமாநில கொள்ளையர்களை பிடித்து விட்டோம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி நிர்மலா பாலக்காட்டில் இருந்து மைசூர் செல்லும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரயில் ஈரோடு பிளாட்பார்ம் வந்த பிறகு மீண்டும் கிளம்பியது. அப்போது ஒரு மர்ம நபர் நிர்மலாவின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார். இது நடந்தது நள்ளிரவு.
ரயில் வேகமாக சென்றதால் நிறுத்த முடியவில்லை. பிறகு சேலம் சென்று தனது நகையை ஒரு கொள்ளையன் கொள்ளை அடித்து விட்டான் என்று புகார் கொடுத்துவிட்டு சென்றார் நிர்மலா. ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க, தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பெண்களை அவர்களின் நகைகளை குறிவைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது அதிர்ச்சியையும் மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது . ஈரோடு ரயில் பயணமா... ஐயோ பாதுகாப்பு இல்லையே பெண்களுக்கு, என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.