தமிழகத்தில் உள்ள மாநில எல்லைகளில் இருக்கும் ஆர்.டி.ஒ அலுவலகங்களில் பெர்மிட் வாங்கி கொண்டுதான் தமிழகத்தை சேர்ந்த வண்டி வாகனங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பது விதிமுறை. அதுபோல்தான் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் சேவை வரியும் சேர்ந்து அந்தந்த மாநில எல்லைகளில் உள்ள ஆர்.டி.ஒ அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் வாங்க வேண்டும். ஆனால் அங்குள்ள பணியாளர்களிடம் டிரைவர்கள் பெர்மிட் கேட்டு வாங்கும் போதே அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் சேவை வரியும் வாங்கி கொண்டு தங்களுக்கும் மாமுல் வாங்கி கொண்டுதான் அனுமதி சீட்டில் சீல் வைத்து கொடுப்பதையே ஒரு நடைமுறையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.
அதுபோல்தான் தேனி வழியாக குமுளி செல்லும் வண்டி வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ரூபாய் 100 வீதம் தேனி என்.டி.பட்டியிலும் லோயர்கேம்பிலும் உள்ள ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் பகல் கொள்ளையடித்து டிரைவர்களிடம் பிடிங்கி வருகிறார்கள்.
அதுபோல் பொள்ளாட்சி அருகே உள்ள கோபாலபுரம் தமிழக எல்லை வழியாக கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர் உள்பட சில பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் இந்த கோபாலபுரத்தில் உள்ள ஆர்.டி.ஒ அலுவலகத்தில் தான் பெர்மிட் போட வேண்டும். அதற்காக அரசு நிர்ணயித்த கட்டணம் 150, சேவை வரி 50 உள்பட 200 ரூபாய் கட்டவேண்டும் என கொட்டை எழுத்தில் அலுவலக முகப்பிலேயே போர்டும் வைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் கூட கேரளவிற்கு செல்லும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களின் டிரைவர்களிடம் தலா 100ரூபாய் வாங்கி கொண்டு தான் அனுமதி சீட்டுடன் சீல் போட்டு கொடுக்கிறார்கள். இப்படி தினசரி கேரளவுக்கு செல்லும் வாகனங்கள் மூலம் ஆயிக்கணக்கான ரூபாய்களை பெர்மிட் மூலம் டிரைவர்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.