தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (28/08/2021) புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, "தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் தினமும் 100 மெ.டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யும் ஆலை ரூ. 25 கோடியில் தொடங்கப்படும். இதர நிறுவனங்களின் விலையோடு ஒப்பிட்டு, ஆவின் பால் பொருட்களின் விலை மாற்றப்படும். ஒற்றைச் சாளர முறையில் ஆவின் முகவர் நியமிக்கப்படுவர்; பாலகங்களில் விற்கும் பால் பொருட்களுக்கு ரசீது தரப்படும். பால் பவுடர், வெண்ணெய் மொத்த விற்பனை முறையில் சீர்திருத்தம் செய்யப்படும். சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் அலகு ரூபாய் 8 கோடியில் நிறுவப்படும். பால் பண்ணையில் தினமும் 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
"ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும். 38,800 பெண்களுக்கு ரூ. 75.63 கோடியில் செம்மறி / வெள்ளாடுகள் 100% மானியத்தில் தரப்படும். நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகரிக்க நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை நெல்லையில் நிறுவப்படும். தருமபுரி திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ரூபாய் 1.80 கோடியில் அமைக்கப்படும். சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் ரூ. 50 கோடியில் அமைக்கப்படும். வண்ணமீன்களை சந்தைப்படுத்த, ஏற்றுமதி மூலம் வண்ணமீன் வர்த்தகத்தை அதிகரிக்க மையம் உதவும். தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் ரூபாய் 5 கோடியில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி ரூ. 3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்" என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது.