தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 19 ஆம் தேதி இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தமிழக கேரள மாநில எல்லையான கோழிவிளை சோதனைச்சாவடி அருகே வந்தபோது சாலையில் எதிரே அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் தொடர்ந்து சென்றதை பார்த்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக ஓட்டுநரிடம் காரை நிறுத்த சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி சாலையில் சென்று கொண்டிருந்த லாரிகளை நிறுத்தி அதிரடியாக ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், "நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். இவ்வளவு லாரிகள் போயிட்டு இருக்கு சோதனை செய்தீர்களா" என கேட்டார். அதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர், "அதிக பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளோம்" என்றார். போலீசாரின் பதிலை கேட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், "எஸ்பிக்கு போன் போடுங்க. எல்லா லாரியையும் மடக்கி லாரியின் சாவியை எடுங்கள். 10 டயர் கொண்ட டாரஸ் வண்டியில் கனிம வளங்கள் கொண்டு போக கூடாது என்று உத்தரவு இருக்கா இல்லையா. அரசு பிறப்பித்த உத்தரவு உங்களுக்கு தெரியாதா" என கடுமையாக போலீசாரை எச்சரித்தார்.
மேலும் அங்கிருந்த அனைத்து லாரிகளுக்கும் அபராதம் விதிக்க சொன்னார். மேலும் சோதனை சாவடியில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.