வரி வசூலில் ஈடுபடும் வரித்தண்டலர்களுக்கு தினமும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று மேயர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வரி வசூல் மற்றும் வரி வருவாய் பெருக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம், நவ. 15 ஆம் தேதி நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
நடப்பு ஆண்டில் இதுவரை வசூலிக்கப்பட்ட வரி வருவாய், நிலுவை வரி, தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூல் உள்ளிட்ட இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ''சேலம் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதுவரை வரி விதிக்காமல் விடுபட்டுள்ள இனங்களைக் கண்டறிந்து அந்த இனங்களுக்கு முறையான வரி விதிப்பு செய்திட வேண்டும். வரி வசூலிப்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் மாநகராட்சி வளர்ச்சி பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வரி வசூலிப்பவர்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது.
வரி வருவாய் ஆய்வாளர்கள் வரி வசூலிப்பவர்களுக்கு தினந்தோறும் இலக்கு நிர்ணயம் செய்து, அந்த இலக்கு எட்டப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, அதிக தொகையை வரியாக செலுத்துபவர்களை கண்டறிந்து, அந்த வரி வருவாயை வசூலிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் குமரவேல், உதவி ஆணையர்கள் ரமேஷ்பாபு, கதிரேசன், செல்வராஜ், தியாகராஜன், கவுன்சிலர்கள், ஏஆர்ஓக்கள், வரி வசூலிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.